மங்கலகரமான தொழில் செய்த காரணத்தினால் “மங்கலன்” என்னும் பெயர் பெற்ற மருத்துவக் குலத்தினர், மன்னர்களால் வழங்கப்பட்ட ‘மங்கல’ என்ற மங்கலகரமான சொல்லினை தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டனர் என ஆய்வாளர் நந்தர் கூறுகிறார். மேலும்; மங்கல சமூகத்தார், சமண சமயத்தைச்சார்ந்த அசோக மன்னரின் நந்த வம்சாவளியில் வந்தவர்கள் என்றும், அவர்கள் மங்கல(வன்), மங்கலை, நாவிதர், சவர்ணன், வைத்தியர், அங்கவைத்தியர், மருத்துவர், மருத்துவச்சி, பட்டர், அம்பட்டர், ஆமாத்தியர், மாமாத்தியர், மகாமாத்திரர், மாமாத்திரர், பெருமஞ்சிகர், பிராணோபகாரி, பிரயோகத்தரையன், ஆசவராயர், சல்லியராயர், குடிமக்கள், ஆசிமக்கள், பண்டிதர், பிராமணர், வேலக்கட்டழவர், வேலக்கட்டழநாயர் என்று பலவகைகளிலும் அழைக்கப்பட்டதைச் சான்றுகளுடன் ஆவணப்படுத்தியுள்ளார் நந்தர். ‘மங்கல’ என்பது திருவள்ளுவரின் வாக்குப்படி தூய தமிழ்ச்சொல் மட்டுமல்ல, வரலாற்றுச் சான்றுகளின்படி அச்சொல் மருத்துவக் குலத்தினரையும் குறிப்பதாகும் என்று கருதும் ஆய்வாளர், சான்றுகளின் மூலம் அதை நிறுவும் முயற்சி இந்த ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. சேக்கிழாரின் பெரியபுராண – சிறுத்தொண்டர் புராணத்தின் “ஆயுள் வேதக...