மருத்துவர் வரலாற்றில்

மங்கலகரமான தொழில் செய்த காரணத்தினால் “மங்கலன்” என்னும் பெயர் பெற்ற மருத்துவக் குலத்தினர், மன்னர்களால் வழங்கப்பட்ட ‘மங்கல’ என்ற மங்கலகரமான சொல்லினை தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டனர் என ஆய்வாளர் நந்தர் கூறுகிறார். மேலும்; மங்கல சமூகத்தார், சமண சமயத்தைச்சார்ந்த அசோக மன்னரின் நந்த வம்சாவளியில் வந்தவர்கள் என்றும், அவர்கள் மங்கல(வன்), மங்கலை, நாவிதர், சவர்ணன், வைத்தியர், அங்கவைத்தியர், மருத்துவர், மருத்துவச்சி, பட்டர், அம்பட்டர், ஆமாத்தியர், மாமாத்தியர், மகாமாத்திரர், மாமாத்திரர், பெருமஞ்சிகர், பிராணோபகாரி, பிரயோகத்தரையன், ஆசவராயர், சல்லியராயர், குடிமக்கள், ஆசிமக்கள், பண்டிதர், பிராமணர், வேலக்கட்டழவர், வேலக்கட்டழநாயர் என்று பலவகைகளிலும் அழைக்கப்பட்டதைச் சான்றுகளுடன் ஆவணப்படுத்தியுள்ளார் நந்தர். ‘மங்கல’ என்பது திருவள்ளுவரின் வாக்குப்படி தூய தமிழ்ச்சொல் மட்டுமல்ல, வரலாற்றுச் சான்றுகளின்படி அச்சொல் மருத்துவக் குலத்தினரையும் குறிப்பதாகும் என்று கருதும் ஆய்வாளர், சான்றுகளின் மூலம் அதை நிறுவும் முயற்சி இந்த ஆய்வு நூலாக உருவாகியுள்ளது.

சேக்கிழாரின் பெரியபுராண – சிறுத்தொண்டர் புராணத்தின் “ஆயுள் வேதக்கலையும்” (செய்யுள் – 3) என்ற பாடல் வரிகளின் மூலம் சிறுத்தொண்டரின் மருத்துவக் குலப் பின்னணியைக் காட்டுகிறார். மேலும், மாணிக்கவாசகரின் குலமான ‘ஆமாத்திய அந்தணர் குலம்’ என்பது மங்கல சமூகம் அல்லது மங்கல அந்தணர்கள் குலம் என்பது நந்தரின் ஆய்வு முடிவு. அம்+பட்டர், அழகிய பட்டர் என்ற பெயரில் மருத்துவத் தொழில் செய்தோர் அம்பட்டர் என்ற அந்தண குலத்தினர். அந்தணர்கள் ‘பட்டர்’ என அழைக்கப்படுவது வழக்கம். “அம்பட்டன் வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்த தலைவன்” என்பதைக் காட்டும் “அம்பட்டன் கோன் சடங்கவி” என்ற ஒரு குறிப்பு தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டிலும் (SII Vol. II, Parts iii, iv & v No. 66. Inscription of Rajaraja) காணப்படுகிறது.  முன்னர் மதிப்புடன் வாழ்ந்தவர் இந்த மருத்துவக் குலத்தினர். மங்கல மரபினர் என்றும் போற்றப்படும் உயர்ந்த நிலையில் வாழ்ந்தவர்கள். ஆனால், காலப்போக்கில் வரலாற்றின் இடைக்காலத்தில் அம்பட்டன் என்ற சொல் மருவி அம்பட்டையன் என்ற இழிசொல் நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், தீண்டாமை நிலைக்கும் இலக்காகியுள்ளனர்.

கல்வெட்டுச் சான்றுகள்:

இரண்டாம் தொகுதி ஆய்வுநூலில், முதல்தொகுதியின் ஆய்வை ‘ஆய்வுரை’ என்ற தலைப்பின் கீழ் தொகுத்து வழங்கியுள்ள முறையானது, ஆய்வுநூலின் இரண்டாம் தொகுதியை மட்டும் படிப்போருக்கு ஆய்வு குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருவதுடன் தொடர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது. ஆய்வுரையைத் தொடர்ந்து வரும் நான்கு பகுதிகள் யாவும் ஆய்வின் சான்றுகளுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகள். பகுதி – 1; 63 கல்வெட்டுச் சான்றுகளைத் தருகிறது. மூல ஆவணங்களில் இருந்து கல்வெட்டு வரிகளையும், அவ்வரிகளுக்கான விளக்கங்களையும் குறிப்புகளையும் முதல் பகுதி வழங்குகின்றது (பக்கங்கள் 32 – 186). நூலின் பெரும்பகுதியாக, 155 பக்கங்களில் விரிவாகத் தகவல் தரும் இப்பகுதி மங்கல சமூகத்தார் கொண்டிருந்த பெயர்களை, அவர்களது சமூக நிலையை, அவர்கள் வழங்கிய கொடைகளை கல்வெட்டுச் சான்றுகளுடன் கொடுக்கிறது. கல்வெட்டு ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது சான்றுகளை இணைக்கும் நூலின் இப்பகுதி என்றால் மிகையன்று.

பட்டயச்செய்திகள்:

தொடர்ந்து வரும் பகுதி -2; மங்கல சமூகத்தார் குறித்து இரு பட்டய/சாசனச் சான்றுகளைக் காட்டுகிறது. ‘ஏழுவகைத் தேவ அம்பலக்காரர் தர்ம சாசனப் பட்டயத்தில்’, கர்ணன் சொர்ணதானம் பண்ணினதேயல்லாமல் அன்னதானம் செய்யவில்லை என்றும், சொர்ணதானம் செய்ததால் பெற்றதன் பலனைக் கைலாசத்தில் அனுபவித்த கர்ணன், அன்னதானம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தைப் பெறவிழைந்து மீண்டும் புவியில் சிறுத்தொண்டராகப் பிறந்தான். பின்னர் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து ஈசனின் திருவருள் பெற்றார் சிறுத்தொண்டர். மருத்துவம் செய்யும் மங்கல சமூகத்தவர் கர்ண பரம்பரையினர் என்ற செவிவழிச் செய்தியை இப்பட்டயமும் கூறுகிறது என்கிறார் ஆய்வாளர். அன்னதான செயலுக்காக எழுதப்பட்ட இந்த மிக நீண்ட பட்டயச் செய்தி தற்காலத்தது என்பதனை, அதன் 98 ஆம் வரியில் “மடத்தின் ரிபேர் செலவுக்காகக் கொடுப்பதாய் ஒப்புக்கொண்ட படியினாலே” என்ற ஆங்கிலம் கலந்த வரியினால் அறிய முடிகிறது. பட்டயத்தின் காலம் எதுவென்று அறிய முடியவில்லை...

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்