காந்தி எனும் நாவிதர்( அல்லது )காந்தி எனும் முடிதிருத்துபவர்…
… அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்…
“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் ஐந்தாம் அத்தியாயம்: பார்பர்.
இவ்வத்தியாயத்தின் முதல் பாகம்.
கீழே இரண்டாம் பகுதி….
=-=-=-=
… அவருடைய ஆசிரமங்களில், வெளியிலிருந்து வந்து, நாவிதர்கள் சவரம் செய்தல், முடிவெட்டுதல் என்கிற பேச்சே இல்லை… ஆசிரமவாசிகள், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவர்களின் நாவித வேலைகளைச் செய்து கொண்டனர்.
காந்தி, ஆசிரம மாணவர்களை, எளிய சுயசார்புடைய வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப் படுத்தப் படவேண்டுமென விரும்பினார். புதுப்பாணி உடைகளுக்கோ, காலவண்ணங்களுக்கேற்றபடியான நவநாகரீகங்களுக்கோ, அறுசுவை சொட்டும் உணவுகளுக்கோ, அவர் ஆசிரமத்தில் இடமில்லை.
=-=-=-=
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை, ஆசிரம மாணவர்கள், குளிக்கச் செல்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். காந்தி அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கூப்பிட்டு, அவர்களுக்கு முடி வெட்டி விட்டார். அம்மாணவர்களுக்கு வருத்தமாக இருந்தது, தங்கள் தலைமுடி ஓட்ட வெட்டப்பட்டதனால்!
ஒரு சமயம், காந்தி இரு ஆசிரமப் பெண்களின் நீண்ட தலைமுடியை குட்டையாக வெட்டினார் கூட!
=-=-=-=
தென் ஆஃப்ரிக சிறைகளில் கைதிகளுக்குத் தலை வாரிக் கொள்ளும் சீப்பு கொடுக்கப் படவில்லை; மேலும், பொதுவாக இரு மாதங்களுக்கும் மேல் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் கைதிகளின் தலைமுடிகளும் ஒட்ட வெட்டப்பட்டு, அவர்களின் மீசைகளும் ஒட்ட மழிக்கப் பட்டன.
இருப்பினும், காந்தியும் அவருடன் கைதான தோழர்களும் இம்மாதிரி செய்யப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர். ஆனால் இதற்கு காந்தி ஒப்புக் கொள்ளவில்லை – அவரைப் பொறுத்தவரை சிறைவாசம் என்றால் அதற்குரிய வழிமுறைகளின் படி தண்டனைகள் பெற்றுக் கொண்டே தீர வேண்டும். அவர் அகராதியில், விதிவிலக்குகளுக்கோ, குறுக்குவழிகளுக்கோ இடமே இல்லை.
ஆக, காந்தி எழுத்துபூர்வமாக சிறை உயரதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் அளித்து, தன் தலைமுடியைத் தான் திருத்திக் கொள்ளவேண்டுமெனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவ்வதிகாரியும் காந்திக்கு ஒரு கத்தரிக்கோலையும், ஒரு நறுக்கி-மட்டாக்கியையும் கொடுத்தார். பின்னர், காந்தியும் ஒன்றிரண்டு கைதிகளும் – ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரங்களுக்கு நாவிதம் செய்தனர்.
=-=-=-=
அவர், புனேவிலுள்ள ஆகாகான் மாளிகையில் கைது செய்யப் பட்டு வைத்திருக்கப் பட்டிருக்கும்போது, அவருடன் ஒரு ஆசிரமவாசிப்பெண்ணும் இருந்தார். அப்பெண், பொடுகுத் (dandruff) தொல்லையினால், மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததனால், ஒரு தளர்ச்சியான / அயர்வான சமயத்தில் காந்தியைக் கேட்டார், “பாபு, நான் என்னுடைய தலைமுடியை சிறிதாக வெட்டிக்கொண்டு, பொடுகுக்கு மருந்து தடவிக் கொள்ளவா?”
காந்தியின் பதில் உடனடியாக வந்தது, “சரியாகச் சொன்னாய், இப்போதே செய்துவிடலாம். கத்தரிக்கோல் கொண்டு வா.” கத்தரிக்கோல் கொணரப் பட்டு, அப்பெண்மணியின் தலைமுடிக் கற்றைகள் வெட்டப் பட்டு வீழ்ந்தன.
நாவிதர் காந்திக்கு அப்போது வயது 75.
=-=-=-=
சுதேசி இயக்கத்தின்போது காந்தி, வெளிநாட்டுச் சவரஅலகை (razor) உபயோகப் படுத்துவதை விடுத்து, நமது நாட்டில் தயாரிக்கப் பட்ட சவரக் கத்திகளை உபயோகிக்கலானார். தொடர்ந்த பயிற்சியினால், அவர் அக்கத்திகளை முறையாக உபயோகிக்கக் கற்றுக் கொண்டு – பிற்காலங்களில், கண்ணாடி, சவர துருசு (shaving brush), சவுக்காரம் (soap) இன்னபிற ஏதுமில்லாமல் சவரம் செய்து கொள்ளக் கூடிய அளவில் தேர்ச்சி பெற்றார்.
அவர் இம்மாதிரி சவரம் செய்து கொள்வதை. சவரக் கலையின் பரிமாண வளர்ச்சியின் ஒரு உச்சம் எனக் கருதியிருக்க வேண்டும்.
அதனால் தான் ஒரு ச்மயம், அவருக்கு உதவின நாவிதருக்கு ஒரு சான்றிதழை இப்படிக் கொடுத்தார் – “முன்னிலால் எனக்கு மிக நேர்த்தியான சவரத்தை, சுய அர்ப்பணிப்புடன் செய்தார்; அவருடைய சவரக் கத்தி சுதேசி – மேலும் அவர் சவரம் செய்வது சவுக்காரமில்லாமல்!”
காந்தியுடைய சில ஆசிரமத் தொண்டர்களும் இந்த மாதிரி முதிரா உணர்ச்சிப்பற்றால் (fad) பீடிக்கப் பட்டனர். எது எப்படியோ, அவர்களுக்கும் இம்மாதிரி சவரம் செய்து கொள்வது கொஞ்சம் குறைவான ஒவ்வாமை தரும் விஷயமாக ஆகியது.
=-=-=-=
காந்திக்குத் தெரிந்திருந்தது – எப்படி நம் கிராம நாவிதர்கள் சஸ்திர சிகிழ்ச்சையாளர்களாகவும் (surgeons) நடைமுறையில் பணி புரிந்தவர்கள், எப்படி அவர்கள் கட்டிகளையும் ரணங்களையும் சரி செய்யக் கூடியவர்களென்றும் தைத்த முட்களை அகற்றக் கூடியவர்களென்றும்; ஆனால் அவரால், அந்நாவிதர்களின் அழுக்குத் துணிகளையும், தூய்மையற்ற உபகரணங்களை உபயோகிக்கும் தன்மையையும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை.
=-=-=-=
ஒரு சமயம், சேவாகிராமத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு தலித், காந்தியிடம் சொன்னார், “எனக்கு வார்தா போகவேண்டும்.”
காந்தி, ஏனென்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார், “எனக்கு சவரம் செய்து கொள்ள வேண்டும்.”
“ஏன், உங்களால், இந்தக் கிராமத்திலேயே சவரம் செய்து கொள்ள முடியாதா?”
“சவர்ண நாவிதர்கள் எனக்கு சவரம் செய்து விட மாட்டார்கள், இங்கு ஒரு தலித் நாவிதரும் இல்லை வேறு.”
காந்தி சொன்னார், “அப்படியானால், நான் எப்படித்தான் இந்தக் கிராம நாவிதரிடம் சவரம் செய்து கொள்ளக் கூடும்?”
காந்தி அன்றிலிருந்து அந்த நாவிதரிடம் சவரம் செய்து கொள்வதை நிறுத்தினார்.
=-=-=-=
ஒவ்வொரு நாளும் கிராமம் கிராமமாக அவர் பயணம் செய்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் அவருக்கு தினமும் தனக்குத்தானே சவரம் செய்து கொள்ள அவகாசமில்லாமல் இருந்தது. அதனால் சில சமயம் அவர் வெளி நாவிதர்களின் உதவி பெற வேண்டியிருந்தது.
=-=-=-=
காதிக்காக அவர் நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் தன்னை சவரம் செய்பவர், காதி அணிந்திருக்க வேண்டுமென்று விரும்பினார். எனவே, காந்தியுடன் பணிபுரிந்து கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்களுக்கு அங்குமிங்கும் ஓடி, அப்படிப் பட்ட நாவிதரைத் தேடி அலைய வேண்டியிருந்தது.
காந்தி அத்தொண்டர்களுக்குச் சொன்னார், “நாம் நம்முடைய சலவைக் காரர்களையும், நாவிதர்களையும் நம் சுதேசிப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் செய்திப் பரிமாற்றத்தில் வல்லவர்கள். அவர்களால் சுதேசி உணர்ச்சியை, எண்ணங்களை சுலபமாகப் பரப்ப முடியும்.”
=-=-=-=
இன்னொரு சமயம், காந்தி ஒரிஸ்ஸாவில் ஒடிஷாவில் ஒரு நாவிதரின் வருகைக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் ஒரு பெண்மணி, நாவிதத்திற்கான சாம்பி (tackle) உட்பட அத்தனை உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்தார். மேலும் அவர், ஆடம்பரமான பெரிய காதணிகளையும், மூக்குத்தியும், மணிமாலையும், சலங்கையும், அரக்கு வளையல்களும் அணிந்து வேறு வந்திருந்தார்.
காந்தி அவரைக் கேட்டார், “ஆக அம்மணி, நீங்கள் எனக்கு சவரம் செய்து விடப் போகிறீர்களா?”
அப்பெண்மணியும் புன்னகை பூத்து ஆமெனச் சொல்லி, தன்னுடைய சவரக் கத்தியை சாணை பிடிக்கலானார்.
காந்தி அவரிடம் மறுபடியும் பேசினார், “அம்மா, நீங்கள் ஏன் இவ்வளவு திண்மையான, கனமான அணிகலன்கள் அணிந்து இருக்கிறீர்கள்? அவை உங்களை அழகாகக் காண்பிக்கவே இல்லை. அவை அழகின்மையுடன் இருப்பது மட்டுமல்லாமல் அழுக்காகவும் இருக்கின்றனவே?”
அந்தப் பெண்மணி முட்டிய கண்ணீருடன் சொன்னார், “அய்யா, உங்களுக்குத் தெரியுமா, இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்துக்காக, நான் இந்த அணிகலன்களைக் கடன் வாங்கித்தான் அணிந்திருக்கிறேன் என்று? இம்மாதிரி நகைகளை அணிந்து கொள்ளாமல் எப்படி நான் ஒரு மாபெரும் மனிதரிடம் வர முடியும்?”
காந்தி நெகிழ்ந்து போனார்.
… காந்தியின் தலையையும், முகத்தையும் மழித்தபின் அப்பெண்மணி அவர் காலடியில், தனக்குக் கிடைத்த வருமானத்தை வைத்து விட்டு, அவரை வணங்கிச் சென்றார்…
Comments
Post a Comment