*"பிராமணன் பூசாரியாக இருந்தா கோயிலுக்கு நஞ்ச நிலமும், பசுவும் காணிக்கையாக கேட்பான். ஆசாரி பூசாரியாக இருந்தால் அருவா சூலம் அடிச்சு வைக்கச் சொல்வான். இடையன் பூசாரியா இருந்தா கிடாவெட்டச் சொல்வான், குயவன் பூசாரியா இருந்தா தீச்சட்டி எடுக்கச் சொல்வான், இலை மண்ணுல சாமி சிலை செஞ்சுவைக்கச் சொல்வான். பூபண்டாரம் பூசாரியா இருந்தா சாமிக்கு மாலைகட்டி போடச்சொல்வான். சாமிக்கு வேண்டுதல் எல்லாம் பூசாரிக்கு பயன்தரும் விசயமாத்தான்

நூல்: சுளுந்தீ 
ஆசிரியர்: இரா. முதுநாகு. 
பதிப்பு: ஆதி பதிப்பகம் 


இந்நாவலின் ஆசிரியர் ஒரு பத்திரிகையாளர். ஒளிப்படக்  கூடம் நடத்திவருகிறார். சொந்த ஊர் ஆண்டிபட்டிக்கு அருகிலுள்ள குரும்பப்பட்டி. 

இந்நாவல் த.மு.எ.க.ச வின் பரிசைப் பெற்றுள்ளது. ஆசிரியருக்கு இது முதல் நாவலாகும். கதையின் களமாக கன்னிவாடி அமைந்துள்ளது. இது ஜமீன் காலத்தில் நடந்த கதையாக உள்ளது. கதையை  இரண்டு பாகமாக பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, கன்னிவாடியின் அரண்மனை நாவிதனான ராமன் (ராமபண்டுவன் ), பன்றிமலை சித்தர், ஜமீன்தார் ஆகியோரை சுற்றி நடக்கக்கூடிய கதை. பன்றிமலை சித்தர் பல மொழிகளை அறிந்த அறிஞர். அதுமட்டுமல்லாமல் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் நோயை தீர்க்கும் வழிவகை அறிந்தவர். அவரின் சீடனாக தன்னை அர்பணித்துக்கொள்ளும் ராமன். ஒரே அடியில் (கையால்தான்) புலியை வீழ்த்தும் வல்லமை படைத்தவன். ஜமீன்தாரிடம் விசுவாசம் கொண்டவன், சித்தரிடம் பக்தியுடையவன். நீண்ட நாள் குழந்தையில்லாமல் சித்தரின் அருளால் ஒரு ஆண்குழந்தை பெற்றவன். அவன் பெயராக தன்னுடைய குலதெய்வத்தின் பெயரான செங்குளத்து மாடன் என்ற பெயர் வைக்கிறான். அவனுக்கு மல்யுத்தம் முதல் அனைத்து வீர விளையாட்டுகளையும் கற்றுத்தருகிறான். சித்த வைத்தியத்தில் ராமன் சிறந்து விளங்குகிறான். ஜமீன்தாரின் அபிமானத்தை பெற்றதினால் குதிரையில் ஏறிப்போகும் அளவிற்கு உரிமை பெறுகிறான். சித்த வைத்திய மருந்து தயாரிக்கும் சமயம் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் உயிர் துறக்கிறான். இது வரையில் நடக்கின்ற கதையில் அவனுடைய ஒரே ஆசையான, தன் மகன் மாடனை போர்படையில் சேர்க்க விரும்புகிறான். அதற்கு ஜமீன்தார் சம்மதம் கொடுக்கவில்லை, அது அவனுக்கு நிராசையாக போய்விடுகிறது. 

இரண்டாவது பாகமாக ராமன் மகன் மாடன், தளபதி, ஜமீன்தார், இவர்களைச் சுற்றி நடக்கிறது. தளபதி, ஜமீன்தாரை பதவி நீக்கம் செய்து தான் அப்பதவியை அடைந்து விடத்துடிக்கிறான் (மறைமுகமாக ). ஜமீன்தார் வழக்கம்போல் தன் எதிரிகளை எப்படி கொல்வாரோ, அதேமாதிரி தளபதியைக்கொல்ல மாடனை பயன்படுத்த விரும்புகிறார். இம்மூன்று பேருக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளை முன்வைத்து நடக்கிறது கதை. இறுதியில் மல்யுத்த போட்டியில் அநியாயமாக மாடன் இறக்கிறான், அவனோடு போட்டிபோட்டு வெற்றி பெற்ற  வங்காரனும் இறக்கிறான். மாடனால் அறிவுறுத்தப்பட்ட இன்னொரு நாவிதனான பெருமாளால் தளபதி வழக்கமான முறையில் கொல்லப்படுகிறார். 

       குல நீக்க செயல்பாடுகளால் பாதிக்கப்படும் ஏழைகளைப்பற்றியும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும் செய்திகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் ஆராயத்தக்க ஒன்றாகும். மனு தர்மத்தை கட்டிக்காப்பற்றத்துடித்த  மன்னர்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும். 

நாவல் எழுதுவது என்பது மிகச்சிறந்த கலையாகும். அதுவும் ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பதாக கூறும் இக்கதைக்கு எத்தனை நாள் இந்நூலின் ஆசிரியர் களப்பணியாற்றி இருப்பார் என்பதை எண்ணும்போது நமக்கு சற்று பிரமிப்பாகத்தான் உள்ளது. அது போக நூலாசிரியரின் பரந்துபட்ட சித்த மருத்துவ அறிவை வியக்காமல் இருக்கமுடியவில்லை. 

**"பிராமணன் பூசாரியாக இருந்தா கோயிலுக்கு நஞ்ச நிலமும், பசுவும் காணிக்கையாக கேட்பான். ஆசாரி பூசாரியாக இருந்தால் அருவா சூலம் அடிச்சு வைக்கச் சொல்வான். இடையன் பூசாரியா இருந்தா கிடாவெட்டச் சொல்வான், குயவன் பூசாரியா இருந்தா தீச்சட்டி எடுக்கச் சொல்வான், இலை மண்ணுல சாமி சிலை செஞ்சுவைக்கச் சொல்வான். பூபண்டாரம் பூசாரியா இருந்தா சாமிக்கு மாலைகட்டி போடச்சொல்வான். சாமிக்கு வேண்டுதல் எல்லாம் பூசாரிக்கு பயன்தரும் விசயமாத்தான் இருக்கும் "

**ராஜபிளவை என்றொரு நோய்வரும். முதுகுத்தண்டில் கட்டி ஏற்படும். அதற்கு மருந்து "அமுக்கரா வேரு, பச்சரிசி, கஸ்தூரி மஞ்சள், பழைய பட்டுத்துணி, இதுகளை மாவுபோட்டு பிளவை இருக்குமிடத்தில் பத்துப்போடு, பேதிக்கு கொடுத்து கருஞ்சித்திரை மூலம் தைலம் இறக்கி மூணு நாள் கொடு, புளி நீக்கிய சாப்பாடு, சரியாப்போகும் ""

"பேதி போவதற்கு வேலிப்பருத்திச்சாறும், விளக்கெண்ணையும் கலந்து கொடுத்தா பேதிப்போகும். குளிர்ந்த நீரோ, மோரோ குடித்தால் பேதி நிற்கும். "

**"வண்ணார்கள் துணியில் அடையாளக்குறி போடுவார்கள். சேங்கொட்டை எனும் கொட்டையை இளந்தீயில் வாட்டி, தண்ணீரில் ஒரு நாழிகை குளிர வைத்தால் ஓட்டுக்குள் இருக்கும் விதை உருகி, எண்ணெய் போல வளவளப்பா மாறிடும், இந்த சாயத்தை கையால் தொட்டால் கை பொத்துப்போகும், இதனால் சேங்கொட்டை மேல் பாகத்தில் கற்றாழை முள்ளினால் துவாரம் போட்டு, அந்த ஓட்டை வழியாய் ஈர்க்கு குச்சியால் தொட்டு அடையாளம் போடுவாங்க "

**துணியிளுள்ள அழுக்கை நீக்க சவுட்டு உப்பு மண் பயன்படும், அந்த சவுட்டுப்பை சினை பிடித்த யானைகள் விரும்பி சாப்பிடுமாம் "

**"வெள்ளாவி வைக்கும் போது, அந்த வெள்ளாவிப்பானையில் கீழடுக்கில் அதிக அழுக்கு இருக்கும் துணிகளையும். மேலே வரவர அழுக்கு குறைவான துணிகளுக்கு வைப்பார்களாம் "

**ஒரு சொலவடை, போரும் புயலும் வந்தா புல்லும் மரமும் மட்டுமல்ல அரசனும் ஆண்டியும் ஒண்ணாயிருவாங்க ""

**"கை விரல்கள் அதிகம் வேர்த்தா அவர்களின் கையால் கிண்டப்படும் மாவு வேகமாக புளிக்கும் "

**"பெண்கள் காது வளர்ப்பது. 

'பெண் குழந்தை பிறந்ததும் ஏழாவது நாள் கைபடாத கத்தாள முள்ளால பச்சப்புள்ள காது தண்டுல துளைபோடுவோம், சோளத்தட்டை வெண்டினை எடுத்து அந்த ஓட்டைக்குள் துணிப்போம், அதற்கடுத்த அஞ்சாவது நாள் ஏகாலியிடம் கேட்டு சுத்தமான துணியை வாங்கி அந்ததுளையில துணிச்சுவச்சு, பத்து நாளைக்கு தண்ணிபடாமா பாத்துக்கணும், பிறகு நீவி விட நீவி விட காது வளரும். முப்பதாவது நாள் தாய்மாமன் வந்து சின்ன குணுக்கு தோடு போட்டுவிடுவான், நீவநீவ பிள்ளை வளரும்போது காது வளர்ந்திரும், இப்படித்தான் காது வளர்க்கிறது, காது அந்துபோனா, காது மேல் தோடினை மெல்ல சீவி துணிக்கருக்கால் அந்த இடத்தில அமுக்கி, கோழிக் கால் ரத்தத்தை ரெண்டு சொட்டு விட்டா அப்படியே ஒட்டிக்கிரும் (பிளாஸ்டிக் சர்ஜரி). 

**"வெள்ளி செந்தூரம் - ஒரு பலம் வெள்ளித்தகட்டை ஈன்ற வாழைமரத்துல பத்து நாள் சொருகி வச்சா, தகடு பொரிப்பொரியாய் மாறும், பின்னர் அதையெடுத்து எலுமிச்சை சாறில் அரைக்க அரைக்க தகடு தண்ணியா கரைஞ்சு கெட்டிசேரும், இத வழிச்சு நிழல் காய்ச்சலா காய வைச்சு, பன்னிரெண்டு எருவாட்டியில குக்கி புடம்போட்டு, தீ நீர்த்தபின் வெள்ளி செந்தூரம் கிடைக்கும் ""

**"கிடேரிகளுக்கு வெப்பாலைபூ, பூவரசம் பூ, உசிலை இலைகள், ஒரு மண்டலம் தீவனமாக கொடுத்து உசிலை மரநிழலில் கட்டி வச்சா சினைபிடிக்கமாக் கடைசி வரையிலும் அரைபடிப்பால் கொடுக்கும் "

**"வெட்ட வாயுவுக்கு சேர்க்கப்படும் கல்மதம் என்றொரு மருந்து முறுகி விளைஞ்சப்பறையில் கிடைக்கும். அப்பாறையை சுழுந்தீ குச்சியால் தோண்டலாம். "

**பளியர் எனும் பழங்குடியில் வெம்புலி, லெங்கம், பளியன், குசவன், கூலன், பாச்சன், தோனி என எழுப்பிரிவுகள் உள்ளனர். "

**"மூங்கில் பூ பூத்தால் அடுத்த வருஷம் செத்துப்போகும், அதை வெட்டி விட்டால் தழைத்து வளரும் ", 

**"பேய் பீர்க்கை இலையைக் கசக்கி மார்பில் தேய்த்தால் மார்பு பெருகுமாம் ". 

**மங்குன காலத்துக்கு மாங்காய், பொங்குன காலத்துக்கு புளி ன்னு சொல்வாங்க. மா நல்லா விளைஞ்சா மழைக்குறையுமாம். "

**"கரையான் புத்துல ஊமைப்புத்தை தோண்டி உள்ளேயிருக்கும் சொத்த எடுத்து தண்ணீரிலே கரைச்சு ஒரு நாழிகை கழிச்சு துணியில் வடிகட்டுனா பால் போல மணக்கும். சுவையா இருக்கும், பெரியவங்களுக்கு கால் நாழி, சின்னவங்க அலக்கு அளவு குடிக்கச்சொல்லு போதும், பசிப்பிணி நீங்கும். "

**"பிரண்டையை தட்டி காயவெச்சு இடித்து துணியில சலித்து, அதில் சம அளவு சர்க்கரை சேத்து நெய்யில் குழப்பி சாப்பிடுங்க, மலச்சிக்கல், கடுப்பு ஓரளவுக்கு நீங்கும் ".

**"சேர வம்சத்துல கல்யாணம் முடிக்காம ஒரு பெண் இறந்து போனா, அந்தப்பெண்ணை புணர்ந்து புதைப்பது பழக்கம். இப்படி புணருவதற்காக மறைவான மேடு ஒன்று இருக்கும், அந்த மேட்டிற்கு வெங்கமேடு ன்னு பேரு. பிணத்தோடு புணருபவனுக்கு வெங்கம் பயல் என்று பேரு வந்திருச்சு ".

**கண்மாய் தண்ணீரில் கசக்குமாட்டிக்காய், எட்டிக்காய், அரைவிதை இவற்றை அரைச்சு கலக்கினா, அந்த தண்ணீர் விஷமாய்ப்போயிடும். 

**"சுழுந்தீ குச்சியை ஓடிச்சு ஈரப்பதம் உள்ள ஆத்து மணலில நாற்பது நாளுக்கு மேல் புதைச்சு வச்சா எலும்பாக மாறும், அந்தக்குச்சி நுனியை கூர்மையாய் தேய்ச்சு பாறையில குத்தினாலும் முனை மழுங்காது. அதைத்தான் குழிதோண்டவும், வேட்டைக்கும் பயன்படுத்துறோம் ""

"அடிபட்டு மோது காட்டுன இடத்துல மஞ்சசாரைப்பாம்பு கொழுப்பை உருக்கி தடவினால் ஒரு மாதத்துல மோது கரைஞ்சுடும்".

**ஓரண்ட வாய்வுக்கு, பொன்னவரை வேரு கஷாயத்துல இரண்டு புங்க விதை நாலு மிளகு வச்சு அரைச்சு, நெல்லிக்காய் அளவு வெறும் வயித்தில சாப்பிட சரியாகும் ".

**"சித்தர்  மூணு நாளுக்கு ஒருதரம் புளியாரை கொழுந்தும், ரெண்டு கை தேனும்தான் சாப்பிடுவாரு ".

**"எட்டு நாள் அதிகாலையில் குளத்தில் மூழ்கி எழுந்து மாவிலிங்க வேர், மிளகு, சின்னசீரகம், வெங்காயம் இதுகளை இடிச்சு சாறுபிழிஞ்சு வீசம்படியை வெறும் வயித்தில குடித்து, புளியமர நிழல் படாமல் உசிலை மரத்தடியில் படுத்துறங்கச்சொல், அரை மண்டலத்துல உடலில் மாற்றம் வரும், சீக்கிரமே கருவுண்டாகும் ".

கொடிவேலி வேர், சித்தரத்தை, சீந்திக்கொடி, வால்மிளகு, திப்பிலி, சிறியாநங்கை, வேப்பம்பட்டு பட்டை, புளியம் பட்டை, இதுகள சம அளவு எடுத்து ரெண்டு மரக்கால் தண்ணீர் ஊத்தி ரவ்வடுப்புல ஒருபடியா வற்ற வச்சு அந்த கஷாயத்தை சிரங்கை அளவு கொடுங்க காய்ச்சல் போயிரும். வயிற்றோட்டம் நிக்காம போனா பசலிக்கீரையை அரைச்சு அரைநாழி கொடுங்க சரியாயிரும் ".

**குருவன்கொலையில் இருந்த வெள்ளை சித்திரை மூல வேரை பொன் நிறமா தீயில் வாட்டி, மணலில் புதைத்து, மூன்று நாள் கழித்து மீண்டும் தீயில் வாட்டி மீண்டும் மணலில் புதைத்து ஐந்து நாள் கழித்து எடுத்தால் இரும்பு கம்பியா கெட்டியா இருக்கும் ".

**தீக்காயத்துக்கு, விளக்கெண்ணெயுடன் சுண்ணாம்புத்தண்ணியை கலந்து அதை புண்ணில் தடவினால் தீக்காயம் ஆறும். ".

**மூத்திரம் பேஞ்ச இடத்துல நாற்றமெடுத்தா அது ஆம்பள பேஞ்ச இடம். பொம்பள பேஞ்ச இடத்துல நாறாது. 

**தட்டான் தாழப்பறந்து, தைலான் குருவி தரையைத்தொட்டா தப்பாம மழைவரும் "

**விகிளி இலையை கசக்கி சாறை தேங்காய் மேல் தடவினால் தேங்காய் தானாக பிளந்துவிடும். 

வயிற்றில் கீரிப்பூச்சி இருந்தால் வேலி பருத்தி சாறும் நல்லெண்ணெயுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட மலத்தோடு பூச்சி வெளியேறும். 

மூத்திரத்தில் ரத்தம் கலந்து போனா, காலையில் வெறும் வயிற்றில் விரலியிலை கொழுந்தை பிடுங்கி அதோடு புழுங்கரிசியை மென்று எச்சியை முழுங்க, அந்த நோய் தீரும். 

போதும் மக்கா, போதும். எவ்வளவு தகவல்கள், அப்பப்பா இன்னும் நிறைய இருக்கு, என்னாலதான் எழுத முடியல. எல்லாத்தையும் எழுதிட்டா நீங்க வாசிக்க மிச்சம் வைக்க வேணாமா, அதான் அப்படியே நிப்பாட்டிட்டேன் மக்கா. 

வாசிக்க வாசிக்க நிறைய வரலாற்று தகவல்களையும் கொடுக்கிறது. மருத்துவ தகவல்கள் அதிகம். 

நண்பர்களே கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் ஆகும் இது. 

அன்புடன்,
பெ. அந்தோணிராஜ் 

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்