முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் மாண்புமிகு பேராசிரியர் திரு.க.அன்பழகன் அவர்களின் உரை
10 10 2000 ஆண்டு தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல சங்கத்தின் சார்பாக முதல் மாநில மாநாடு மரியாதைக்குரிய மாநில தலைவர் ஐயா திரு.M.நடேசன் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் சென்னியவிடுதி திரு.C.வைத்தியநாதன் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்திலேயே மரியாதைக்குரிய மாநில அமைச்சர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள் அந்தக் கூட்டத்தில் "மரியாதைக்குரிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொள்வார்கள்" என்று நாம் அறிவித்திருந்தோம். அந்த வகையில் அந்தக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மரியாதைக்குரிய இனமான பேராசிரியர் கல்வி அமைச்சர் மான்புமிகு திரு.க.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அந்த உரை மறுநாள் முரசொலி பத்திரிக்கையில் வந்தது. அந்த பதிவின் மறுபதிப்பாக அக்டோபர் 2000ஆம் ஆண்டு நமது சமுதாய மடல் பத்திரிக்கையில் வந்ததை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.
நன்றியுடன்
புதுக்கோட்டை
M.A.பாண்டியன்
மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கம்
=== ___________===
கல்வி அமைச்சசர் பேராசிரியர் அவர்கள் ஆற்றிய உரை வறுமாறு:-
_______________________________________
நீங்கள் எல்லாம் இந்த நேரம் இந்த மேடையில் முதல்வர் கலைஞர் அவர்கள் பேசுவார் என்றும், பேசுகிற பொழுது என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே! என்று அழைப்பார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர் வர முடியாத இக்கட்டான ஒரு நிலைமை காரணமாக - உடல்நிலை குறைவு காரணமாக, நான் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்படாவிட்டாலும், அழைக்கப்படாத விருந்தாளியாக, நீங்கள் சென்று பேசி வாருங்கள், என்று கலைஞர் அவர்கள் என்னை அனுப்பினார்.
ஒருவகையில் கூறுவதாக இருந்தால், கலைஞருக்கு மட்டும் நான்கு வார்த்தை பேச முடியுமானால் இந்த நேரம் வீட்டிலேயே இருக்க மாட்டார். இங்கேயேதான் இருப்பார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் ஒரு சுற்றுப் பயணத்தின் காரணமாக உடல்நலம் ஓரளவு, கொஞ்சம் குறைபாடு - பாதிப்புக்கு ஆளாகி அந்த நிலையிலேயே திருவள்ளூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கின்ற நிகழ்ச்சிக்கு சென்று அங்கு ஓயாத மழையின் காரணமாக - மழையிலே நனைந்து விழாவை நிறைவேற்றி வந்ததின் காரணமாக தொண்டையை திறந்து பேச முடியாத அளவிற்கு அவர்களுக்கு ஒரு வழி ஏற்பட்டு இருக்கின்றது. அது இயற்கை தான்.
ஆனால் அந்த வலியோடு வாய்திறந்து இந்த மாநாட்டில் பேச முடியாது என்றொரு நிலைமையின் காரணமாகத்தான், நம்முடைய பொன்முடி இங்கே பேசுகின்ற பொழுது, சொன்னதைப்போல, நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அனைத்து வாரியங்கள் சார்பாகவும் நடைபெறுகின்ற ஒரு பெரிய விழாவில் நான் எப்படியும் பேசுகின்றேன். பேசுகிற பொழுது இந்த மருத்துவர் சமூகத்தைச் சார்ந்தவர்களின் வேண்டுகோளை பற்றியும், அன்றைக்கு என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை கலைஞர் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். எனவே இந்த நம்பிக்கையை நீங்கள் பெறலாம்.
அதுமட்டுமல்ல, இந்த மருத்துவ சமுதாயம் தன்னுடைய வரலாற்றில், முடி திருத்துவோர் சங்க வரலாறு பிற்காலத்தில் இணைக்கப்பட்ட ஒன்று. தொடக்கத்தில் இந்த வரலாறு மருத்துவர் சங்கமாக தான் தொடங்கியது. 1930, 35 ,40 ,45 -களில் நான் மாணவனாக இருந்த அந்த காலத்தில் பல இடங்களில் நம்முடைய தோழர்கள் மருத்துவ சங்கம் தான் தொடங்குவார்கள். ஒரு பத்து பேர் அல்லது எட்டு பேரு தான் அந்த ஊர்களில் இருப்பார்கள். அந்த சங்கங்களுக்கு யார் தலைவர்களாக இருப்பார்கள் என்றால், ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியாவுக்கு போய் தொழில் நடத்தி, கைகளிலே காசு பெற்று, தமிழ்நாட்டிற்கு வந்து கொஞ்சம் புதிய முறையில் கடை வைத்து, இரண்டு கண்ணாடிகள், நாற்காலிகள் வைத்து கடைகளில் தொடங்கியவர்கள் தான், அந்தக் காலகட்டத்தில் சங்கத்தை உருவாக்குவதற்கு தூண்டுகோலாக இருந்தார்கள்.
நீங்கள் இன்றைய தினம் பெற்றிருக்கின்ற மறுமலர்ச்சி சாதாரணமானது அல்ல. உங்களிடத்தில் காணப்படுகின்ற எழுச்சி என்பது விலைமதிப்பில்லாதது. உங்களுடைய சமூகம், ஒரு காலத்தில் தாழ்ந்த சமூகம், சமுதாயத்தில் மிகவும் தாழ்வாக எண்ண கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருந்த சமூகம். இன்றைக்கு அப்படி அல்ல. எங்காவது கிராமத்தில் சில இடங்களில் அப்படி இருக்கலாம். அந்த கிராமப் பகுதிகளிலே கூட இன்றைக்கு நம்மை, நம்முடைய தோழர்களை மதிப்பு குறைவாக நடத்துவதை அநாகரீகம் என்று உணரக்கூடிய ஒரு காலம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.
நான் ஒரு வகையிலே சொல்வதாக இருந்தால், தொடக்க காலத்தில் இந்த சமூகமே கூட, முடி திருத்துவோர் என்ற எண்ணத்தோடு இந்த சமூகத்தின் பணி தொடங்கி விடவில்லை. மிகப் பழங்காலத்தில், பெரும்பாலோர் மருத்துவர்களாக தான் இருந்தார்கள். அந்த மருத்துவம், பெரும்பாலும் சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம், வீட்டு மருத்துவம் அந்த வகையைச் சார்ந்தது. நான் பிறந்த பொழுது கூட என்னுடைய தாய்க்கு மகப்பேறு பார்த்து அம்மையார், ஒரு மருத்துவ பெண்மணி தான். அன்றைக்கு டாக்டர்களோ, அல்லது நர்சுகளோ, அல்லது இன்றைக்கு இருக்கக்கூடிய மருத்துவ வசதிகளோ, இல்லாத காலம். இன்றைக்கு இன்றைக்கு கூட அவர்கள் மருத்துவம் பார்க்கின்ற அளவிற்கு பின்விளைவுகள் இல்லாத பார்க்கின்ற பக்குவமான முறைகளை தெரிந்தவர்கள் வேறு துறைகளில் இல்லை. மருத்துவ தொழிலை நாட்டில் பாரம்பரியமாக செய்தவர்கள் அவர்கள் தான். சித்த மருத்துவம் இன்றைக்கு காப்பாற்ற பட்டிருக்கின்றது என்று சொன்னால், இந்த பாரம்பரியம் நீண்டகாலம் இருந்ததால்தான் காப்பாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த மருத்துவ தொழிலில் அவ்வளவு வருமானம் இல்லை என்பதால்தான் பல பேர் அந்த தொழிலை மறந்தவர்களாக மாறி, முடிதிருத்துகின்ற தொழிலுக்கு மெல்ல மாறி விட்டார்கள்.
அதேபோன்று, சென்னை போன்ற நகரத்தில் இசைத்துறையிலே, மருத்துவர் சமூகம்தான் முன்னிலையில் இருந்தது. ஒரு வகையில் இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் உங்களுக்கு பாதுகாவலராக இருப்பதற்கான இயற்கையான ஒரு காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக சட்டமன்றத்தில், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த சட்டமன்றம், காமராஜர் முதல் அமைச்சராக இருந்த சட்டமன்றம், எல்லோரும் மதிக்கக்கூடிய ஓபி இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த சட்டமன்றம். அந்த சட்டமன்றத்தில் தான் கடந்த 92 ஆம் ஆண்டு 93 ஆம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் சட்டமன்றத்திலே உள்ளவர்கள் கூட, எழுப்பாத கேள்வி, அந்த நிலையிலேயே அவர் பேசுகின்ற பொழுது சொன்னார் ""நான் ஒரு 'பாப்பாத்தி'. என்னை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து ஆட்சி செய்ய அனுமதித்து இருக்கிறார்கள். நான் பாப்பாத்தி என்று தெரிந்தும் என்னை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்"" என்று அந்த அம்மையார் பேசினார்.
ஆனால் கலைஞர் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த டாக்டர் ஹெண்டே அவர்கள் ""உங்களுடைய ஆட்சி நிர்வாகம் மூன்றாம் தரமான ஆட்சி"" என்றா. அதே ஹெண்டே அதற்குப் பின்னர் "கலைஞரை போன்ற ஒரு சிறந்த நிர்வாகியை நான் பார்த்ததில்லை" என்று பேசினார்.
அதற்கு என்ன பொருள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?. நான் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களை சார்ந்தவன். என்னை நீ அப்படித்தான் சொல்வாய் என்ற எண்ணத்தை ஏற்படுகின்ற அளவிற்கு நான் சூத்திர சாதி, சூத்திர சாதியை வேறு பல சாதி மதித்ததில்லை என்று சுட்டிக் காட்டுகின்ற அளவிற்கு பேசியவர் கலைஞர். சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? அடிமைப்பட்ட அத்தனைபேரும் சூத்திரன். இழிவுபடுத்தப்பட்ட அத்தனை பேர்களும் சூத்திரர்கள். சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட அத்தனைபேரும் சூத்திரர்கள். ஒழிப்புக்கு மட்டுமே உரியவர்கள் சூத்திரர்கள். சொத்துக்கு உரிமை இல்லாதவர்கள் என்று அவர்களின் சொத்துக்களை கூட உயர் சாதிக்காரன் எடுத்துக்கொள்ளலாம் என்று மனுநீதியிலே எழுதி வைத்த அந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சூத்திரர்கள்.
அந்த அம்மையார் அப்படி பேச என்ன காரணம்? நான் மேல்சாதி, நான் அறிவுள்ள சாதி, நான் ஆட்சி நடத்துவதற்கு பிறந்த சாதி, அதை எதிர்ப்பதாக சிலபேர் சொன்னார்கள், ஆனால், என்னைத்தான் தேர்ந்தெடுத்தார்கள், என்று அந்த அம்மையார் பேசினார்.
கலைஞர் சொன்னார். நான் ஆளப்பிறந்த சாதி அல்ல. நான் அடிமையாக்கப்பட்ட சாதி. நான் இழிவுக்கு உட்பட்ட சாதி. நான் வேலை செய்வதற்கும், தொண்டு செய்வதற்கும் கருதப்பட்ட சாதி, புராணத்திலே, இதிகாசத்தில் கேவலப்படுத்த சாதி.
ஆனால் என்னுடைய கட்சி மூன்றாம் தரமாக இருந்தால் அதுவே எனக்கு முன்னேற்றம்தான் என்ற கருத்திலேயே, கலைஞர் பேசினார்.
எனவே கலைஞர் உங்களை பாதுகாக்கவோ, உங்களுக்கு ஆதரவாக இருக்கவோ வேறு காரணம் தேவையில்லை. நம்மை போல் உணருகிறார் கலைஞர். நீங்கள் என்ன உணர்கிறீர்களோ, நீங்கள் என்ன கருதுகிறீர்களோ, அதே உணர்வு கலைஞருடைய இரத்தத்திலே ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்தவன்.
அதைவிட இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் தந்தை பெரியாரால் ஊட்டப்பட்ட உணர்வு, இந்த நாட்டின் சமுதாய அமைப்பு முறையில் ஏற்படுத்தப்பட்ட வர்ணாசிரம தர்மத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் மாற்றியமைக்க வேண்டும். மேல்சாதி, அதைச் சூழ்ந்துள்ள ஆதிக்கம், அது மாற்றப்பட வேண்டும். கீழ்சாதி - அதைச் சூழ்ந்துள்ள இழிவுகள் துடைக்கப்படவேண்டும். சமத்துவத்தை நோக்கி நம்முடைய பயணம் நடைபோட வேண்டும். ஜாதி ஒழிப்பு உணர்வு வளர்க்கப்பட வேண்டும். நாம் எல்லோரும் ஒரே இனம், நாம் எல்லோரும் ஒரே குடும்பம் என்ற உணர்வு அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டது.
அந்த உணர்வு இந்த இயக்கத்தின் மூலமாக வளர வேண்டும் என்று கருதி அந்த லட்சியத்தோடு பணியாற்றுகிறவர் நம்முடைய கலைஞர். இன்றைக்கு கூட நான் சொல்ல விரும்புகின்றேன், அவரை தவிர வேறு யாரிடத்திலே பாதுகாப்பைப் பெற முடியும்?. அவரை விட உங்களைப் பற்றி அக்கறை காட்டக் கூடிய இன்னொரு தலைவர் இந்த நாட்டில் யார்? உங்களை புரிந்தவர்தான் வேறு யார் இருக்கிறார்கள்? அல்லது, புரிந்தால் கூட வழிமுறை செய்யக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு தலைமை கலைஞரைத் தவிர வேறு யாரிடத்தில் இருக்கிறது?.
இங்கே பண்டிதர் ஆனந்தம் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார்கள். இந்த சமுதாயத்திற்கு ஒரு காலத்திலே பெருமை சேர்க்கின்ற சின்னமாக விளங்கியவர் பண்டிதர் S.S.ஆனந்தம். அவர் இருக்கின்ற பொழுதெல்லாம் ஓர் ஆண்டுக்கு ஒரு முறையாவது அவரை போய் நான் பார்ப்பேன். இல்லை என்றால் அவரே என்னை தேடி வருவார். அறிஞர் அண்ணாவை தேடி வருவார். அவர் எங்களை பார்க்க வருவதற்கு காரணம் தமிழ்ப்பற்று. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடு, அதேநேரம் சித்த மருத்துவத்தில் அவருக்கு இருந்த மிகப் பெரிய ஆர்வம், அந்த மருத்துவத்தில் வல்லவர் அவர். இன்றைக்கு அவருடைய மகன் டாக்டர் ஆனந்தகுமார் சித்த மருத்துவத்தில் தன்னுடைய வாழ்நாளை ஒப்படைத்து பணியாற்றியவர். என்னுடைய மாணவர். அவரும் இன்றைக்கு சித்த மருத்துவர்களுக்கெல்லாம் ஊக்கமளித்துக் கொண்டு இருக்கின்றார்.
ஆனால், இந்த சித்த மருத்துவத்தை எப்போது அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அதிலே பெரிய வளர்ச்சி இல்லை. அதிலே தங்களுக்கு பெரிய முன்னேற்றம் வராது. இப்போது பி. எஸ். எம் .எஸ் .படிக்கிறார்கள். ஆகவே, அதில் நம்மால் எப்படி வளர முடியும் என்ற கைவிட்டுவிட்டார்கள். எனவே முடி திருத்துவோர் சங்கத்தில் மருத்துவத்தை பற்றி பேசுவது எதற்காக என்று கேட்டால், எந்த சமுதாயமாக இருந்தாலும் பாரம்பரியமாக இருக்கின்ற தொழில் என்ற எண்ணத்தில், ஒரு தொழிலில் இருப்பார்களேயானால் முன்னேற்றம் தடைபட தான் செய்யும்.
தந்தை பெரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படிப்பட்ட சமூக கூட்டத்தில் பேசுகின்ற பொழுது ""என் அருமை தோழர்களே! மருத்துவ தொழிலாளர்களே, சலவை தொழிலாளர்களே, உங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஏற்படவேண்டும். உங்களை அனைவரும் மதிக்க வேண்டும். உங்களை தாழ்வாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று நான் ஆசைப்படுகிறேன். என்னுடைய இனம் என்ற என்ற என்ன காரணத்தால், என்னுடைய இனத்தின் தாழ்வை போக்க நான் விரும்புகிறேன். அதற்கு நீங்கள் துணை செய்ய விரும்புவர்கள். ஆனால், பரம்பரை தொழில் என்று, ஒரே தொழிலில் ஒட்டிக் கொண்டு இருக்காதீர்கள். பரம்பரைத் தொழில்தான் தெய்வம் என்று கருதாதீர்கள். அது ஜாதி மனப்பான்மை. வர்ணாசிரம தருமத்தின் கட்டளையை அது. ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்- உங்கள் பரம்பரை தொழிலில் இருந்து வெளியே வாருங்கள்.
வேறு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யுங்கள்"", என்று சொன்னார்.
அவர் சொன்னதற்கு காரணம் என்ன? ஏதோ தொழில் அடிப்படையில் காப்பாற்றினால் கூட அது இன்னொரு வகையில் நம்மைப் பாதிக்கும். அறிஞர் அண்ணா விரும்பினார்.இந்த நாட்டிலே அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டுமானால் அவர்களிடத்தில் கல்வி வளர வேண்டும். சிந்தனை பெருகவேண்டும். முற்போக்கு எண்ணங்கள் அவர்களிடத்திலே வளர வேண்டும். அதற்கு நாம் வழி காண வேண்டும், என்று பலமுறை பேசுகிறார். அறிஞர் அண்ணா திமுக கழகத்தை தோற்றுவித்த பொழுது கூட கழகத்தை உருவாக்கியது முதலாளிகளுக்காக அல்ல. வட்டிக்கடை வீரர்களுக்காக அல்ல. கைத்தொழில் செய்கின்ற ஏழைகளுக்காக, பாடுபடுகின்ற மக்களுக்காக, உழைப்பாளிகளுக்கு. ஆகவே, இந்த இயக்கத்தை பணக்காரர்களை நம்பி நடத்தவில்லை. பாட்டாளிகளை நம்பித்தான் நடத்துகிறேன், என்று தான் அறிஞர் அண்ணா குரல் கொடுத்தார்.
66 ஆம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் அறிஞர் அண்ணா பேசுகின்ற போது,"எனக்கு தேர்தல் நிதி தேவைப்படுகிறது. என் தம்பி கருணாநிதியிடம் 10 லட்சம் கேட்டேன். 11 லட்சம் திரட்டித் தந்திருக்கிறார். ஏழைகளிடம் இருந்து பெறப்பட்ட நிதி தான் எனக்கு உள்ளபடியே இந்த இயக்கத்திற்கு உயிர்மூச்சாக இருக்க முடியும்" என்று சொன்னார். எனவே அந்த அடிப்படையில் திமு கழகம் இலட்சியத்தை மறந்து கட்சியல்ல, இன மானத்தை ஏலம் போடுகிற கட்சி அல்ல. மாற்றாருக்கு மண்டியிடுகின்ற கட்சியும் அல்ல. வைதீகத்தை வணங்குகிற கட்சியும் அல்ல. மனிதத்தன்மையை காப்பாற்றுகின்ற கட்சி. உங்களை மதிக்கின்ற நிலைமையை இந்த நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொத்தக் கொள்கையில் நீங்களெல்லாம் இடம் பெற்றிருக்கிறீர்கள். கலைஞர் "என்னுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே" என்றால், மருத்துவர் சங்கம் உள்ளடக்கம்! சலவையாளர் சங்கமும் உள்ளடக்கம்!! கைவண்டி இலுப்பூர் சங்கமும் உள்ளடக்கம்!!! உழைப்பாளிகள் அத்தனை பேரும் உள்ளடக்கம்.! தமிழ் நாட்டில் வாழுகின்ற இளையதலைமுறை அத்தனை பேரும் தலை நிமிர்வதற்காகத்தான் என் உடன்பிறப்பே என்கின்றார்.
முதலமைச்சர் "உடன்பிறப்பே" என்று சொல்கின்றபோது, ஒரு தலைவர் "உடன்பிறப்பே" என்று சொல்கின்ற போது உங்களுக்கு அது பெருமையாக இல்லையா? கலைஞர் நம்மை அவருடைய தம்பியாக, சகோதரராக மதிக்கிறார் என்பது பெருமை அல்லவா?. இன்னொரு முறை நீங்கள் எண்ணி பார்ப்பீர்களேயானால் ஆயிரம் ரூபாய் திடீர் வருமானம் வருவதைவிட நம்முடைய மானத்தை காப்பாற்றுகிற உணர்வுதான் மிகச் சிறந்தது. அந்த உணர்வு இன்றைக்கு மெல்ல உருவாகி இருக்கின்றது. நான் உங்களிடம் ஒரு மலர்ச்சியை, எழுச்சியை காணுகின்றேன். தன்னம்பிக்கையை காணுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை மதிக்கவேண்டும் என்ற வகையில், மதுரை அய்யாச்சாமி அவர்கள் மேலவை உறுப்பினராக இருந்தார். அதேபோல சென்னையிலே மாசிலாமணி சட்டமன்ற மேலவையிலே உறுப்பினராக இருந்தார். சலவைத் தொழிலாளர்களிலே கோலப்பன் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். உங்களுக்கெல்லாம் இடம் கொடுப்பதற்காகத்தான் மேலவை கொண்டுவருவதற்கு கலைஞர் தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பி உள்ளார்.
திமு கழகத்தைவிட சமத்துவ பரணி பாடக்கூடிய இடம் வேறு எங்கே இருக்கிறது. இந்த சமூகத்திலிருந்து யார் யார் முன்னணிக்கு வருகிறார்களோ அவர்களுக்குத் தானாகவே இந்த இயக்கத்தில் இடம் கிடைக்கும். இந்த இயக்கம் அவர்கள் அத்தனை பேரையும் மதிக்கும். அவர்கள் செயல்படுகின்ற ஆற்றலை வைத்து போற்றி அவர்களை உயர்த்தும்.
கலைஞர் அவர்கள் இந்த சமூகத்திலே உங்கள் மீது அக்கறை உள்ளவர் என்பதற்கு வேறு பல காரணங்களை விட, அவர் சட்டமன்றத்தில் பேசியதை விட, அவரே கூட இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்களின் இசையை அறிஞர் அண்ணாவே வந்து ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கேட்டிருக்கின்றார்.
இதிலே இராஜரத்தினம், ""என் இசையை அண்ணாவே கேட்டார். இதுவே எனக்குப் போதும்"" என்று மகிழ்ந்து இராஜரத்தினத்தின் நாதஸ்வரத்தை கேட்க மக்கள் ஓடோடி வருவார்கள் என்று அண்ணா பேசி,அப்படிப்பட்ட இராஜரத்தினமே அந்த காலத்தில் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள போனால், அவர் மேலே போட்டிருக்கின்ற சரிகை அங்கவஸ்திரத்தை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டுமென்று கோவில் தர்மகர்த்தாக்கள் கூறுகின்ற அந்த காலத்தில் இராஜரத்தினம் தான் முதன்முதலாக, ""இடுப்புல எடுத்து கட்ட மாட்டேன், வேண்டுமானால் மேலே போட்ட அங்க வஸ்திரத்தோடு நாதஸ்வர இசை இசைப்பேன், இல்லையானால் நான் நடப்பேன்."" என்று சொல்லி அந்த எதிர்ப்பு காரணமாக அந்த இசைத்துறையில் திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்கள் மிகப்பெரிய வழிகாட்டியாக, சுய மரியாதை காரணமாக அன்றைக்கு போற்றப்பட்டார். அதேபோல கலைஞர் அவர்களின் சமூகம் ஒரு காலத்தில் இழிக்கப்பட்டது. இந்தஇழிவுகளையெல்லாம் துடைக்கப் புறப்பட்டவர் தான் கலைஞர். அதற்காகவே வாழ்பவர்.
உங்கள் மாநில பொதுச்செயலாளர் வரவேற்புரையில் சிறப்பாக பேசினார். தீர்மானங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார். இந்த தீர்மானங்கள் கலைஞரின் கரத்தில் தரப்படும். அவரை விட உங்களுக்கு பாதுகாப்பைத் தர, இந்த தீர்மானங்களை நிறைவேற்ற, எண்ணிப் பார்த்து செயலாற்ற, இன்னொருவர் கிடையாது என்று கூறிக் கொள்கின்றேன்.
இவ்வாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
நன்றி-முரசொலி
(மாநாட்டை துவக்கி வைத்து திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகிறார்)
வரலாறு விடுதலை செய்யும் ...
ReplyDelete*
திருவைக்குமரன்
வரலாறு விடுதலை செய்யும் ...
ReplyDelete*
திருவைக்குமரன்